சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
குலசேகரன் முனிரத்தினம் July 27, 2026 11:44 AM

Jana Nayagan Boxoffice Collection On Day 4: முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படம், முதல் ஞாயிற்றுக்கிழமையில் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

ஜனநாயகன் - 200 கோடியை தாண்டிய வசூல்

முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான கடைசி திரைப்படமாக ஜனநாயகன் கடந்த வாரம், உலகம் முழுவதும் வெளியானது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி தியோல் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது. வெளியான முதல் நாளான கடந்த வியாழனன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அடுத்த நாள் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் சரிந்தாலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்தியாவில் மட்டுமே  சுமார் 32 கோடி ரூபாயை ஜனநாயகன் வசூலித்துள்ளது. இதனால் படத்தின் ஒட்டுமொத்த வசூல் முதல் வார இறுதியில் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது. 

நான்காவது நாளில் ரூ.32 கோடி வசூல்: 

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டுமே தமிழ் எடிஷனில் சுமார் ரூ.27.30 கோடி, இந்தியில் சுமார் ரூ.3.35 கோடி மற்றும் தெலுங்கு எடிஷனில் சுமார் ரூ.1.35 கோடி என மொத்தம் சுமார் 32 கோடி ருபாய் வசூலாகியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் மட்டுமே ஜனநாயகன் படத்தின் வசூல் 124 கோடி ரூபாயை (Net Collection) எட்டியுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.145.98 (Gross Collection) கோடியாக உள்ளது. இதில் தெலுங்கு டப்பிங் வெர்ஷனின் சுமார் 7 கோடி ரூபாயும்,  இந்தி டப்பிங் வெர்ஷனின் சுமார் 10 கோடி ரூபாய் வசூலும் அடங்கும். தமிழ் எடிஷன் மட்டுமே நான்கே நாட்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்துள்ளது. கருப்பு திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவிலேயே 100 கோடி ரூபாய் வசூலை கடந்த இரண்டாவது தமிழ் திரைப்படமாக ஜனநாயகன் உருவெடுத்துள்ளது. கருப்பு திரைப்படத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வசூலான 198 கோடி ரூபாய் (Net Collection) என்ற வசூலை விஜயின் கடைசி திரைப்படம் முறியடிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதல் நான்கு நாட்கள் வசூல்

  • முதல் நாள்  - சுமார் ரூ.42.70 கோடி
  • இரண்டாவது நாள் - சுமார் ரூ.21.15 கோடி
  • மூன்றாவது நாள் - சுமார் ரூ.28.90 கோடி
  • நான்காவது நாள் - சுமார் ரூ.32 கோடி

இதையும் படியுங்கள்: TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?

சர்வதேச சந்தையில் ஜனநாயகன்:

ஜனநாயகன் திரைப்படம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சர்வதேச சந்தையில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, முதல் நான்கு நாட்களில் படத்தின் வசூல் சுமார் ரூ.71.50 கோடியை கடந்துள்ளது. இதனால் படத்தின் மொத்த வசூல் நான்கு நாட்களில் 217.48 கோடியாக (Gross Collection)  உயர்ந்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியான விஜயின் அனைத்து படங்களின் வசூலும், குறைந்தபட்சம் 200 கோடியை கடப்பது வழக்கமாக மாறியுள்ளது. அடுத்த வார இறுதி வரை எந்தவொரு பெரிய பட்ஜெட் படங்களும் வெளியாக வாய்ப்பு இல்லாததால், ஜனநாயகன் திரைப்படம் அடுத்த 10 நாட்களுக்கு திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்து என கூறப்படுகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் அவருக்கு உள்ள குடும்ப ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். படத்திற்கு A சான்றிதழ் கிடைக்காவிட்டால் படத்தின் முதல் வார வசூல், 250 கோடியை நெருங்கி இருக்கும் என கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.