Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
பேச்சி ஆவுடையப்பன் August 15, 2026 03:14 PM

படங்களிலோ, சினிமாவிலோ நாம் இருட்டடிப்பு செய்யப்பட்டால் இந்த உலகம் அதைப் பார்த்து சும்மா இருக்காது என நடிகை வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 

ஆல் பாஸ் பட ஆடியோ விழா

ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் மைதீனின் ஆல் பாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் துஷ்யந்த், பிக்பாஸ் ஜனனி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலையும் குடும்பக் கதையையும் வன்முறை இல்லாமல் காட்சிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

சூர்யா, ஆர்.ஜே.பாலாஜிக்கு எதிராக பேசிய மன்சூர் அலிகான்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான் கருப்பு படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சூர்யாவையும், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியையும் கடுமையாக சாடினார். அப்படத்தில் இடம்பெற்ற நாங்க நாலு பேரு பாடலுக்கு கஷ்டப்பட்டு நடனம் ஆடியதாகவும் அதனை படத்தில் நீக்கிவிட்ட நிலையில் youtube தளத்தில் வெளியிடச் சொல்லி கேட்ட போதும் சரியான பதில் தெரிவிக்கவில்லை. தயவுசெய்து நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளுங்கள். ஆனால் சக கலைஞனை இருட்டடிப்பு செய்யாதீர்கள். கேரக்டர் கொடுங்கள் என்று நாங்கள் பிச்சை கேட்கவில்லை. இந்த விஷயத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என சரமாரியாக சாடினார்.

வினோதினி வைத்தியநாதனுக்கு நடந்த சோக சம்பவம் 

இதனைத் தொடர்ந்து பேசிய வினோதினி, தன்னுடைய சினிமா கேரியரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு மன்சூர் அலிகானை சமாதானப்படுத்தினார்.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் மிக முக்கியமான வேடத்தில் வினோதினி நடித்திருந்தார். அப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் கோமாளி படம் தொடர்பான நிகழ்ச்சிக்கு வினோதினி அழைக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஒரு மணி நேரம் மேக்கப், உடை என நேரம் செலவழித்து அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் கடைசி இருக்கைக்கு இரண்டு வரிசை முன்னால் உட்கார வைக்கப்பட்டாராம். 

மேடையில் கூட என்னை அழைத்துப் பேசவில்லை. இதனால் கோபமடைந்த வினோதினி அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.  அதேசமயம் படம் வெளியான பிறகு சென்னையில் உள்ள ஈகா தியேட்டரில் பார்க்க சென்ற போது அவருடைய காட்சிகள் வந்ததும் அருகில் இருந்த பெண் ஒருவர் கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார். அதனால் இந்த நிகழ்வை குறிப்பிட்டு படங்களோ அல்லது மற்ற இடங்களிலோ நீங்கள் இருட்டடிப்பு செய்தாலும் இந்த உலகம் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.