மலையாள சினிமாவின் மர்லின் மன்றோ என அழைக்கப்பட்ட நடிகை விஜய ஸ்ரீ தற்போது உயிருடன் இல்லை. அவர் ஒரு பாடலில் இடம்பெற்ற காட்சி ஒன்றால் உயிரை மாய்த்துக் கொண்டார் என்றால் யாராலும் நம்ப முடியாது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள பூஜாபுரத்தில் 1953ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி விஜயஸ்ரீ பிறந்தார். சிறு வயதிலிருந்தே காண்பவர்களை எல்லாம் அவரின் அழகு கவர்ந்து வந்தது. அதுவே 13 வயதில் விஜயஸ்ரீயை சினிமாவுலகிற்கு அழைத்துச் சென்றது. 1966ம் ஆண்டு வெளியான சிட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். அப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்தில் அவர் சிறிய வேடம் தான் ஏற்றிருந்தார். ஆனால் அதன் தாக்கம் தென்னிந்திய சினிமாவில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழிலும், கன்னடத்திலும் பல படங்களிலும் நடித்தார். அப்படியாக 1969ம் ஆண்டு பூர்விக மொழியாக மலையாளத்தில் திக்குரிஷி சுகுமாரன் நாயர் இயக்கிய பூஜா புஷ்பம் என்ற படத்தில் பிரேம் நசீர், ஷீலாவுடன் இணைந்து நடித்திருந்தார். அவரின் நடிப்பைக் கண்டு வியந்த திக்குரிஷி ஒரே நேரத்தில் தனது 3 படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். இதனால் 1970களின் தொடக்கத்தின் அவரின் சினிமா கேரியர் வேகமெடுத்தது.
அப்படியாக விஜய ஸ்ரீ நடித்த லங்கா தஹனம், டாக்சி கார்,அரமலுன்னி , போஸ்ட்மேன் கண்ணனில்லா, அங்கத்தட்டு ஆகிய படங்கள் அவரை முன்னணி ஹீரோயினாக மாற்றின. இதில் பெரும்பாலான படங்கள் அவர் பிரேம் நசீருடன் தான் நடித்தார். இருவரும் ஜோடி என்றால் அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற நிலை இருந்தது. அந்தளவு விஜய ஸ்ரீ அழகின் காரணமாக மலையாள சினிமாவின் மர்லின் மன்றோ என புகழப்பட்டார்.
இப்படியெல்லாம் விஜய ஸ்ரீ உச்சம் தொட்ட நிலையில் அவர் நடித்த ஒரு பாடலின் காட்சி உயிரைப் பறிக்கும் அளவுக்கு சென்று விட்டது. இதற்கிடையில் அவர் கவர்ச்சியாகவும்,துணிச்சலான கேரக்டர்களிலும் நடித்தார். அதுவே அவரின் மீதான அடையாளத்தை மாற்றி கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை குத்த வைத்தது. அதனை மாற்ற விஜய ஸ்ரீ பல முயற்சிகள் எடுத்தார்.
1973ம் ஆண்டு அவர் பொன்னபுரம் கோட்டை என்ற படத்தில் பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் Valliyoor Kaavile என்ற பாடல் உள்ளது. அதில் நீர்வீழ்ச்சி ஒன்றில் வெள்ளை நிற உடையை அணிந்து குளிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது தண்ணீர் வேகத்தால் விஜய ஸ்ரீ ஆடை நழுவினாலும் அவர் சமாளித்து நடித்தார். இந்த காட்சியை கேமரா பதிவு செய்த நிலையில் அதனை பயன்படுத்த வேண்டாம் என விஜய ஸ்ரீ சொன்னதாக கூறப்படுகிறது. அதனையும் மீறி படக்குழு அந்த பாடலில் காட்சிகளை இணைத்தது.
ஏற்கனவே கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தால் மன உளைச்சலில் இருந்த விஜய ஸ்ரீக்கு இந்த சம்பபம் மேலும் பிரச்னையை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. 1974 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி தனது 21 வயதில் தற்கொலை செய்துக் கொண்டார். பொன்னபுரம் கோட்டா வெளியாகி ஓராண்டு கழித்து அவர் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த பட சர்ச்சை தான் தற்கொலைக்கு காரணம் என சினிமாவுலகில் பேசப்பட்டாலும் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.