CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
குலசேகரன் முனிரத்தினம் August 24, 2026 02:44 PM

TTV Dhinakaran: மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் தங்குமிடம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் குற்றச்சாட்டு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “கரூர் மாவட்டத்தில் சமூக நீதி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் - அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுகளும், கண்காணிப்பு குழுக்களும் வெற்று விளம்பரத்திற்குதானா?” என சாடியுள்ளார்.

தவெக அரசை விமர்சிக்கும் டிடிவி தினகரன்..

கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையிலும், மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதாக வெளியாகியிருக்கும் காணொளி தவெக அரசின் சமூக நீதி கொள்கையையும், அக்கறையையும் தோலுரித்து காட்டியுள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை, எளிய விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் சமூகநீதி விடுதியில் தரமான மற்றும் சுகாதாரமான உணவைக் கூட வழங்க முடியாத தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

முதலமைச்சரின் ஆய்வு வீணா?

சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் நேரடியாக திடீரென ஆய்வு செய்து மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகம் முழுவதும் உள்ள சமூகநீதி விடுதிகளின் அவலநிலைகளை நேரடியாக ஆய்வு செய்வாரா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்தும் ஆய்வுகளும், அவர்கள் அமைக்கும் கண்காணிப்புக் குழுக்களும் வெற்று விளம்பரத்திற்காகவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே, ஆட்சியை சமூகவலைதளத்தில் நடத்தாமல், கொஞ்சம் களத்தில் மக்களுக்கு பயன்படும் படி நடத்தவேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதோடு,சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கும் விடுதி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களுக்கு தரமான உணவு, பாதுகாப்பான தங்குமிடம், சுகாதாரமான சூழல் ஆகியவற்றை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சமூகநீதித்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்” என டிடிவி தினகரன் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.