தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வி அடைந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது தவெக, அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இளம்தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழில் துறை அமைச்சராக கீர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது உடை தொடர்பாகவும் பேச்சு தொடர்பாகவும் தொடர்ந்து சமூகவலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வந்தது. பதவியேற்ற நாள் முதல் கீர்த்தனாவை பற்றி வெளியாகாத விமர்சனங்கள் இல்லை. அவரின் நடை, உடை, பேச்சு என அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், கேலி கிண்டலுக்குள்ளாகியும் வருகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அமைச்சர் கீர்த்தனாவின் முகத்தோற்றத்தை கொண்ட நபர் ஒருவர் அரைகுறை ஆடையோடு காரில் இருந்து இறங்கி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் அந்த பெண் தான் இல்லையென அமைச்சர் கீர்த்தனா மறுப்பு தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் இருப்பவர் நான் அல்ல. ஆனால் ஒருவேளை அது நானாகவே இருந்திருந்தாலும், அதனால் என்ன ஆகிவிடப் போகிறது? ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய அல்லது விசாரணைக்குரிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன? என பதிவொன்றையும் வெளியிட்டார்.
இந்த பரபரப்பான நிலையில், நேற்று தஞ்சையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவிட்டு வரும் நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி சமூக வலைதளத்தில் அதிரடியாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 24, 2026
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை…
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும் என கனிமொழி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.