இயக்குநர் விக்ரமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் இயக்கிய உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் , தெலுங்கு , கன்னடம் என மூன்று மொழிகளில் ஹிட் அடித்த இப்படத்தின் பாடல் ஒன்றை அனுமதியின்று அமீர் கான் படத்தில் பயண்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் கார்த்திக், ரோஜா, அஜித் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’. இப்படத்தின் இசையை எஸ்.ஏ. ராஜ்குமார் அமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அப்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ‘ஏதோ ஒரு பாட்டு’ பாடல் பெரும் ஹிட்டானது.
இயக்குநர் விக்ரமன் தனது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்போது, ‘ஏதோ ஒரு பாட்டு’ பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், அந்தப் பாடலுக்கான உரிமையை வாங்காமல், அமீர்கான் நடித்த ‘Mann’ இந்திப் படத்தில் ‘Chaha Hai Tujhko’ என்ற பெயரில் காதல் பாடலாக பயன்படுத்தப்படது. மேலும், ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வெற்றிக்கு படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் கார்த்திக்கின் அசத்தலான நடிப்பு முக்கிய காரணங்களாக இருந்தது. அதேபோல், அஜித்தும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ரோஜாவுக்கு தமிழக மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதும், எனக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் கிடைத்தது " என்று கூறியுள்ளார்.
1999ஆம் ஆண்டு அமீர்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான ‘Mann’ திரைப்படத்தில் ‘Chaha Hai Tujhko’ என்ற பாடல் இடம்பெற்றது. சஞ்சீவ்-தர்ஷன் இசையமைத்த இந்தப் பாடல், ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ ஒரு பாட்டு’ பாடலின் மெட்டையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ‘Chaha Hai Tujhko’ பாடல் தனியாக ஒரு மிகப்பெரிய ஹிட் பாடலாக மாறியது. அமீர்கான் மற்றும் மனிஷா கொய்ராலாவின் காதல் காட்சிகளுடன் இடம்பெற்ற இந்தப் பாடல், 90களின் இந்தி இசை ரசிகர்களிடையே இன்றளவும் பிரபலமாக உள்ளது.
ஆனால், இது மட்டும் அந்த ஆல்பத்தில் நடந்ததாக கூறப்படவில்லை. ‘Mann’ படத்தின் பல பாடல்கள் வெளிநாட்டு மற்றும் பிற மொழிப் பாடல்களின் மெட்டுகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ‘Nasha Yeh Pyar Ka’ இத்தாலிய பாடலையும், ‘Tinak Tin Tana’ மலேசிய பாடலையும், ‘Kali Nagin Ke Jaisi’ அல்ஜீரிய பாடலையும் அடிப்படையாகக் கொண்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.