ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ராகேஷ் தாரா August 16, 2026 07:44 PM

பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராமாயணம் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக இப்படத்தின் பட்ஜெட் ரூ.4,000 கோடி என தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறியதாக வெளியான தகவல் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், இந்த ரூ.4,000 கோடி என்பது ஒரு படத்திற்கான பட்ஜெட் அல்ல என நடிகர் யாஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். யாஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட முயற்சிகளில் ஒன்றாக உருவாகி வரும் இப்படம், சர்வதேச அளவிலும் ரசிகர்களை சென்றடையும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

4000 கோடி பட்ஜெட் சர்ச்சை

இந்நிலையில், ராமாயணம் படத்தின் பட்ஜெட் ரூ.4,000 கோடி என தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு திரைப்படத்திற்கே ரூ.4,000 கோடி செலவிடப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது. ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டு ராமாயணம் படத்தின் செலவு குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

யாஷ் விளக்கம் 

இதற்கு தற்போது ஆப் கி அதாலத் நிகழ்ச்சியில் யாஷ் விளக்கம் அளித்துள்ளார். ரூ.4,000 கோடி என்பது ஒரு படத்திற்கான பட்ஜெட் கிடையாது என்றும், ராமாயணம் படத்தின் இரண்டு பாகங்களுக்குமான மொத்த செலவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொகையில் இரண்டு பாகங்களுக்கான புரமோஷன் பணிகளும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படங்களைப் போலவே ராமாயணம் படத்திற்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டிங் மற்றும் புரமோஷன் திட்டமிடப்பட்டுள்ளதாக யாஷ் கூறியுள்ளார். படத்தின் தயாரிப்பு செலவுடன் சர்வதேச விநியோகம், விளம்பர நிகழ்ச்சிகள், மார்க்கெட்டிங், மெர்ச்சண்டைஸ் உள்ளிட்ட பல்வேறு செலவுகளும் இந்த மொத்த தொகையில் அடங்கும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ஒரு திரைப்படம் உலகளவில் வெளியாகும்போது அதன் புரமோஷனுக்காக தயாரிப்பு பட்ஜெட்டுக்கு இணையான அல்லது அதைவிட அதிகமான தொகை செலவிடப்படலாம் என்றும் யாஷ் தெரிவித்துள்ளார். ராமாயணம் திரைப்படத்தை இந்தியாவைத் தாண்டி உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே படக்குழுவின் நோக்கம் என்பதால், அதன் மொத்த திட்டத்தையும் கணக்கில் கொண்டுதான் ரூ.4,000 கோடி என்ற தொகை குறிப்பிடப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.