அமெரிக்க-ஈரான் போரின் தொடக்கத்தில் நடந்த ஒரு ராணுவ நடவடிக்கையின்போது, இரண்டு போர் விமானங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்ட பின்னர், மூன்று ஈரானிய விமானிகளை தாங்கள் சிறைப்பிடித்ததாக ஈரான் கூறியுள்ள கூற்றை கத்தார் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பிராந்திய பதற்றங்களை தணிப்பதற்கான தற்போதைய ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் குறிப்பாகக் கவலையளிப்பதாகவும் அது விவரித்துள்ளது.
மூன்று விமானிகளும் 6 மாதங்களாக கத்தாரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை விடுவிக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது.
விமானிகள் கத்தார் வான்வெளியை மீறியதாகக் கூறப்பட்டதை அடுத்து, கத்தார் அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் இலக்கு செல்லும் பாதையை உறுதிப்படுத்தியதாக, கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் முகமது அல்-அன்சாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
"ஈரானிய விமானிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். மேலும், இந்த குறிப்பிட்ட நேரத்தில் வெளிவரும் இத்தகைய தவறான தகவல்கள் எங்களை ஆச்சரியப்படுத்துகின்றன," என்று அவர் கூறியுள்ளார்.
விமானிகளுடன் தொடர்பு கொள்ள கத்தார் அதிகாரிகள் முயன்றதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அல்-அன்சாரி கூறினார். மேலும், அதன்பிறகு, கத்தார் தனது மோதல் விதிமுறைகளின்படி செயல்பட்டு, சர்வதேச சட்டத்திற்கு இணங்க தனது பிராந்தியத்தை பாதுகாக்க "அவசியமான நடவடிக்கைகளை" எடுத்ததாகவும் அவர் கூறினார்.
அந்த நேரத்தில், கத்தார் ஏற்கனவே அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் இந்த விவகாரம் குறித்து கையாண்டிருந்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து கத்தார் கூறுகையில், தங்கள் குழுக்கள் விமானிகளின் உடல்களைத் தேடியதாகவும், அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட விமானிகளில் ஒருவரின் உடலை ஒப்படைப்பதற்காக ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்தது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, ஏப்ரல் மாதம் ஒரு ஈரானியக் குழுவிற்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் கத்தார் கூறியது. அல்-அன்சாரியின் கூற்றுப்படி, அந்த அழைப்பிற்கு ஈரானியத் தரப்பு பதிலளிக்கவில்லை.
கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின்போது, இரண்டு ஈரானிய Su-24 ரகப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 3 ராணுவ விமானிகள் கத்தார் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கத்தார் இந்த அறிக்கையை வெளியிட்டது.
ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர் குழுவில் காணாமல் போனவர்களைத் தேடும் குழுவின் தளபதி முகமது பாகெர்சாதே, அந்த மூன்று விமானிகளையும் ஜாவத் சலேஹி, அப்துல்-மஜித் தஷ்டியன் மற்றும் எம்ரான் பெஹ்ருஷியன் என அடையாளம் காட்டியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மூன்று விமானிகளும் கடந்த 6 மாதங்களாக கத்தார் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாகர்சாதே கூறினார்.
மேலும், அந்த மூன்று விமானிகளும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவோ, பேட்டி காணவோ, அல்லது தங்கள் குடும்பத்தினருடனோ அல்லது அவர்களது வழக்கை விசாரிக்கும் ஈரானிய அதிகாரிகளுடனோ தொடர்பு கொள்ளவோ கத்தார் அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்றும், இதன் மூலம் கத்தார் அவர்களது உரிமைகளை மீறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
போர் தொடங்கிய மூன்றாவது நாளான, 2026 மார்ச் 2 அன்று, அதே நடவடிக்கையில் கொல்லப்பட்ட நான்காவது விமானியான மஜித் காசெமியின் உடல் திருப்பி அனுப்பப்பட்டதாக பாகெர்சாதே கூறினார்.
விமானிகளை அணுகுவதற்கு ஐ.சி.ஆர்.சி-க்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்த அதிகாரி கோரிக்கை விடுத்ததாக ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.