கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
ராகேஷ் தாரா August 16, 2026 09:44 PM

2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இதுவரை 142 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் வெறும் 17 படங்கள் மட்டுமே லாபத்தை கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் 125 திரைப்படங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுவது, கோலிவுட்டின் தற்போதைய வணிக நிலையை வெளிப்படுத்துகிறது.

கவலைக்கிடமான நிலையில் தமிழ் சினிமா

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக சவாலான சூழல் நிலவி வந்தது. ஜனவரி மாதம் வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. ஜனவரி மாதம் வெளியான பராசக்தி திரைப்படமும் எதிர்பார்த்த வசூல் வெற்றியை பெறவில்லை. மார்ச் மாதத்தில் வெளியான வர்த்தக அறிக்கையின்படி, சுமார் 75 படங்கள் வெளியாகியிருந்த நிலையில் வெறும் ஐந்து படங்களே லாபகரமானதாக இருந்ததாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஜி. தனஞ்செயன் தெரிவித்திருந்தார். அந்த பட்டியலில் தலைவன் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி மற்றும் யூத் ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.

அதிக வசூல் செய்த கருப்பு

அதன்பிறகு வெளியான படங்களில் சூர்யாவின் கருப்பு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் கணக்கெடுப்புகளின்படி, இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக உலகளவில் வசூலித்து 2026-ன் மிகப்பெரிய தமிழ் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. இதேபோல் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி எதிர்பாராத அளவுக்கு வசூல் செய்த தாய் கிழவி, யூத் மற்றும் பிளாஸ்ட் ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளன.

142 படங்கள் ரிலீஸ்

குறிப்பாக பிளாஸ்ட் திரைப்படம் அதன் பட்ஜெட்டை ஒப்பிடும்போது மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய படங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ரூ.18 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவானதாக தெரிவிக்கப்படும் இப்படம் உலகளவில் சுமார் ரூ.77 கோடி வசூல் செய்ததாக வர்த்தக கணக்குகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2 திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ரூ.55 கோடிக்கும் அதிகமாக உலகளவில் வசூலித்த இப்படம் லாபகரமான முயற்சியாக அமைந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.

இதனால் 2026ல் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமின்றி, குறைந்த மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் உருவாகும் படங்களும் சரியான கதை மற்றும் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தால் வெற்றி பெற முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 142 படங்களில் 17 மட்டுமே லாபம் என்ற புள்ளிவிவரம், தயாரிப்பு செலவு, திரையரங்க வசூல் மற்றும் வணிக திட்டமிடல் ஆகியவற்றில் கோலிவுட் எதிர்கொள்ளும் சவாலையும் தெளிவாக காட்டுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.