குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
அருண் சின்னதுரை August 20, 2026 02:14 AM

போட்டியில் பங்கேற்பவர்கள் எவ்வித போதைப்பொருட்களையோ அல்லது மதுவையோ உட்கொள்ளக் கூடாது. - நீதிபதி உத்தரவு.

கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கோரி மனு
 
சோழவந்தானை சேர்ந்த முகேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில்...," மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கக்கோட்டை கிராமத்தில் மந்தைக்களத்தில் ஆக. 29, 30 ஆகிய தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கோரி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க மறுத்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டார். எனவே, அதை ரத்து செய்து அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
கபடிப் போட்டி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்..," ஆகஸ்ட் 29, 30 தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபடிப் போட்டி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. போட்டியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது கட்சித் தலைவர், சாதி, சமூகம் அல்லது மதப்பிரிவு ஆகியவற்றுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கூச்சலிடவோ அல்லது முழக்கம் எழுப்பவோ கூடாது, பொது அமைதி மற்றும் நிம்மதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
 
சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான ஆட்சேபனைக்குரிய வாசகங்கள்
 
சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் அல்லது மதம் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது. மதத் தலைவர்களைப் புகழ்ந்து பாடும் அல்லது மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பாடல்களை ஒலிக்கவிடக் கூடாது. குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரைக் குறிக்கும் வகையிலான எந்தவொரு பிளக்ஸ் போர்டு அல்லது விளம்பரப்பலகை வைக்கப்படக் கூடாது. குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடிப் போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் ஆவர். போட்டியில் பங்கேற்பவர்கள் எவ்வித போதைப்பொருட்களையோ அல்லது மதுவையோ உட்கொள்ளக் கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் நிகழ்ச்சியை நிறுத்தவும் போலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. என உத்தரவிட்டார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.