வேலூர்: வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. விஜயநகர பேரரசு கட்டுப்பாட்டில் வேலூர் நகரம் முக்கிய இடத்தை பிடித்தது. இங்கு, 16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின்கட்டுப்பாட்டில் செயல்பட்ட நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை பல வரலாறுகளை தன்னுள் மறைத்து வைத்துள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் புரட்சி வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை ஆங்கிலேய படைகளில் இருந்த இந்திய வீரர்களால் நடத்தப்பட்டது. முதல் இந்திய சுதந்திர போராட்டமாக இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இப்படி, சிறப்புமிக்க வரலாற்றை எடுத்துரைத்து வருவதில் வேலூர் அரசு அருங்காட்சியகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள நகர அரங்கில் (டவுன் ஹால்) கடந்த 1985-ம் ஆண்டு அரசு அருங்காட்சியகம் சிறிய அளவில் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வரலாற்றை எடுத்துக்காட்டும் அரிய கற்சிற்பங்களைக் கொண்டு அரசு அருங்காட்சியகம் செயல்பட தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு கால கட்டங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கப்பட்ட கற்சிலைகள், நடுகற்கள், பேழைகள், நாணயங்கள், ஐம்பொன் சிலைகள் உள்ளிட்டவற்றால் அரசு அருங்காட்சியகம் வேகமாக வளர தொடங்கியது.
அதேநேரம், வேலூர் கோட்டையில் செயல்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெளியேறியநிலையில் மாவட்ட நீதிமன்ற வளாகமாக செயல்பட்ட கட்டிடத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு, கடந்த 1999-ம் ஆண்டு முதல் 8 பிரிவுகளுடன் கூடிய அரசு அருங்காட்சியகம் செயல்பட தொடங்கியது.