சேலம்: வார விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்ததால், ஏற்காடு திருவிழாக் கோலத்தில் காட்சியளித்தது.
ஏற்காட்டுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அதிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், கடந்த சில வாரங்களாக, ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான்காவது சனிக்கிழமை விடுமுறை காரணமாக, ஏற்காட்டுக்கு நேற்று முன்தினமே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது.
நேற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்ததால், ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்திலும் கூட்டம் மிகுந்திருந்தது. ஏற்காட்டில் உள்ள காட்சி முனைப் பகுதிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்தபடி பள்ளத்தாக்கின் இயற்கை அழகையும், வானத்தில் மிதந்து சென்ற மேகக் கூட்டங்களையும் ரசித்த படி தங்கள் விடுமுறையை கழித்தனர். இதேபோல, அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா என ஏற்காட்டில் உள்ள பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகள் மிகுதியாக காணப்பட்டனர்.
எரி படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே, ஏற்காட்டில் வழக்கத்தை விட, நேற்று பகலில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது, சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்பட, ஏற்காட்டில் கடைகள் பலவற்றிலும் அதிக விற்பனை இருந்தது.