தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடரும் மழைப் பொழிவால் குற்றால அருவிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசுகிறது. இன்றும் மழை நீடித்தது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் செங்கோட்டையில் 42.80 மி.மீ., குண்டாறு அணையில் 38.80 மி.மீ., அடவிநயினார் அணையில் 16 மி.மீ., ராமநதி அணையில் 10 மி.மீ., தென்காசியில் 5.20 மி.மீ., சிவகிரியில் 5 மி.மீ., கடனாநதி அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 76 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.17 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 113.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 82 அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது.
ராமநதி அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. கடந்த 16-ம் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அணை நிரம்பியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு 100 கனஅடிக்கு மேல் வெளியேற்றப்படுகிறது. மழை நீடித்தால் உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.