நாகர்கோவில்: குமரி அணைகளில் உபரிநீர் நிறுத்தப்பட்டிருப்பதால், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு ஆர்வத்துடன் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மழை நின்று வெயில் அடித்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வந்த நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை நேற்று 44.05 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 572 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. அணையில் இருந்து 380 கனஅடி தண்ணீர் மட்டும் மதகு வழியாக வெளியேறி வருகிறது.
உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் அளவு குறைந்து மிதமான சூழல் நிலவியது. இதைப்போல் புத்தன் அணை, தாமிரபரணி ஆறு உட்பட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்ததால் ஏற்கெனவே இருந்த தடை நீக்கப்பட்டு நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சனிக்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் திற்பரப்பிற்கு ஆர்வத்துடன் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.52 அடியாக இருந்த நிலையில் அணைக்கு 346 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 14.43 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 120 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் மிதமாக ஓடுவதால் ஆடி அமாவாசை பலி தர்ப்பணம் செய்யும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.