சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட பைக்காரா படகு இல்லம் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
GH News August 08, 2024 12:08 AM

உதகை: சாலை சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு இருந்த பைக்காரா படகு இல்லம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரபல மலை பிரதேச சுற்றுலா தலமாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். மேகங்களை உரசும் மலை முகடுகள், இதமான காலநிலை, பசுமையான தேயிலை தோட்டங்கள், காட்சி முனைகள் என பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

பைக்காரா படகு இல்லம்: உதகை அருகே அமைந்துள்ள பைக்காரா படகு இல்லம் படகு சவாரி செய்ய பிரபல இடமாக உள்ளது. இந்த பைக்காரா அணையானது, உதகை – கூடலூர் சாலையில் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

படகு சவாரி: மலைகள், வனத்திற்கு நடுவே இயற்கை சூழலில் அமைந்துள்ளது பைக்காரா அணை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்வார்கள். இதில் இங்கு இயக்கப்படும் ஸ்பீட் போட்டில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவர். சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். பைக்காரா படகு இல்லத்திற்கு, உதகை – கூடலூர் சாலையில் 1.3 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.