புதுடெல்லி: தருமபுரி மாவட்டத்தின் ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று பேசிய திமுக எம்பி மணி வலியுறுத்தினார்.
இது குறித்து திமுக எம்பி மணி மக்களவையில் பேசியது: “தமிழகத்தின் தருமபுரி மாவட்ட எல்லையில் ஒகேனக்கல் எனும் இடத்தில் குடகு மலையிலிருந்து உருவாகும் காவிரி ஆறு வந்து கலக்கிறது. ஒகேனக்கலில் காவிரி நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியினால் ஏற்படும் அபரிமிதமான சாத்தியக் கூறுகளை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஒகேனக்கல்லுக்கு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை மட்டும் சுமார் 35 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர்.
ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வந்து செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், ஒகேனக்கல்லில் சுற்றுலா அனுபவத்துக்காக ரோப் கார், விசைப்படகு, உயிரியல் பூங்கா, உடலுக்கு எண்ணெய் தேய்க்கும் மையங்கள் உள்ளிட்டவை அமைக்க வேண்டும்.மேலும், அப்பகுதியை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் பேசினார்.