தேனி: கனமழையின் காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி தேவதானப்பட்டி வனச்சரகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் இன்று காலை முதலே நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.