உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை - குன்னூர் மற்றும் உதகை - கேத்தி சிறப்பு மலை ரயில் சேவை இம்மாத இறுதி வரை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - உதகை இடையே தினமும் தலா ஒரு முறை, உதகை - குன்னூர் இடையே தினமும் தலா நான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. கோடை சீசன் காலத்தில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் - உதகை, உதகை - குன்னூர் மற்றும் உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்களை இயக்கியது.
இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், ஜூலை மாதம் வரை சேவை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், உதகை - குன்னூர் மற்றும் உதகை - கேத்தி இடையே இம்மாதம் இறுதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகையிலிருந்து குன்னூருக்கு இந்த சிறப்பு ரயில்கள் 16, 17 மற்றும் 25ம் தேதிகளில் இயக்கப்படும். குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரயில், உதகைக்கு காலை 9.40 மணிக்கு வந்தடையும். உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும். இதில், 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும்.