மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் 3-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கிவைத்து, வானில் பறக்கவிடப்பட்ட வண்ண, வண்ண பட்டங்களை பார்வையிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கடற்கரை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 3-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று (ஆக.15) நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பட்டம் பறக்க விடும் விழாவை தொடங்கிவைத்தனர். மேலும், கடற்கரை பகுதியில் பறக்கவிடப்பட்ட பல்வேறு விதமான வண்ண, வண்ண பட்டங்களை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் பார்வையிட்டனர்.
பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சுற்றுலாத்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்ததன் காரணமாக, உலகின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். இதில், 3ம் ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் விழா திருவிடந்தை பகுதியில் உள்ள கடற்கரையில் 4 நாட்களாக நடைபெற உள்ளது.