உதகை: உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இந்த மலை ரயிலில் பயணிக்க வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இம்முறையும் கோடை சீசனின் போது சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், ஜூலை மாதம் வரை சேவை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், உதகை - குன்னூர் மற்றும் உதகை - கேத்தி இடையே இம்மாதம் இறுதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதன்படி, சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக குன்னூரிலிருந்து காலை 8.20 மணிக்கு உதகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின் உதகையில் இருந்து குன்னூருக்கு இயக்கப்பட்டது.
அதேபோல் உதகை – கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு மழை ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பயணித்தனர். இந்த சிறப்பு மலை ரயிலில், 80 முதல் வகுப்பு இருக்கைகளும், 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் உள்ளன.