மதுரை; மதுரைக்கு புதிதாக வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக, தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ‘மதுரை டூரிஸம் பாஸ்போர்ட்’ அறிமுகம் செய்துள்ளது. இந்த ‘டூரிஸம் பாஸ்போர்ட்’ சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான ஆன்மிக சுற்றுலா மற்றும் பாரம்பரிய சுற்றுலா ஸ்தலங்களில் மதுரை முக்கியமானது. கன்னியாகுமரி, கொடைக்கானல், ராமேசுவரம் வரக்கூடிய அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மதுரைக்கு வராமல் செல்ல மாட்டார்கள். தற்போது மதுரை சுற்றுலா ஸ்தலம் என்பதை தாண்டி, உணவு சுற்றுலாவுக்கு புகழ்பெற்று வருகிறது.
அனைத்து வகை, சைவ, அவைச உணவு வகைளில் விதவிதமான நவீன, பாரம்பரிய உணவுகள் வழங்கும் ஹோட்டல்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது, மதுரையை தாண்டி நான்கு வழிச்சாலையில் பிற நகரங்களுக்கு நெடுந்தூரம் செல்லக்கூடிய பொதுமக்கள் கூட, மதுரை நகருக்குள் வந்து தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு செல்கிறார்கள்.
இது தவிர, மதுரையில் தமிழ் பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை விழாவை காணவும், நேரடியாக பங்கேற்கவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த பண்டிகை நாட்களில் மதுரைக்கு வருகிறார்கள். மேலும், அவர்கள் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடக்கும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டிகளை பார்வையிட்டு செல்கிறார்கள்.