உதகை: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் பாஸ்ட் டேக் சோதனைச் சாவடி மாற்றியமைக்கும் இறுதி கட்டப்பணிகள் நடப்பதால், வரும் 22-ம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சம் பேரும் ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேரும் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் முடிந்தும், பள்ளிகள் திறக்க ஓரிரு நாட்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறையாமல் உள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் பொதுவாக உதகையில் தாவரவியல் பூங்கா படகு இல்லம் தொட்ட பெட்டா உட்பட்ட இடங்களுக்கு ஒரே நாளில் சென்று வர திட்டமிட்டு சுற்றுலா செல்வார்கள். ஆனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொட்ட பெட்டா போன்ற இடங்களுக்கு செல்லும்போது வாகன கட்டணம் வசூலிக்க காத்திருத்தல் போன்ற காரணங்களால் திட்டமிட்டபடி அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அவர்களால் போக முடிவது இல்லை.