போராடும் சாம்சங் ஊழியர்கள்.. அரசு செய்ய வேண்டியது என்ன ? தீர்வை முன்வைக்கும் ஜி.கே. வாசன்.. 
கிஷோர் September 22, 2024 11:14 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஊழியர்களுக்கு பல்வேறு தரப்பட்ட அமைப்பு சார்பில் ஆதரவுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : தமிழக அரசு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனமும் ஒன்று. அனைத்து நிறுவனங்களும் இலாபகரமாக இயக்கப்பட வேண்டும், தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும், தமிழ்நாடும் முன்னேற வேண்டும் என்பதற்கேற்ப தமிழக அரசு செயல்பட வேண்டும்.

தொடர் வேலை நிறுத்த போராட்டம்

ஆனால் கடந்த 12 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானது. அதாவது சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 12 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தொழிற் சங்க மையத்தினர் (சிஐடியூ) போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்து இட்போராட்டத்தை முன்நின்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயம் இல்லை

குறிப்பாக சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை என்ற குறை உள்ளது. தற்போது சாம்சங் நிறுவனத்திற்கு எதிரிலேயே நடக்கும் தொடர் போராட்டத்தை நிறுவனமும், தமிழக அரசும் கண்டும் காணாமல் இருப்பது நியாயமில்லை. 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்திற்கும், போராடும் தொழிலாளர்களுக்கிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க நிறுவனமும், தமிழக அரசும் முன்வரவில்லை என்று தொழிலாளர்கள் குறை கூறுகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துங்கள்

நிறுவனமும் இலாபத்துடன் இயக்கப்பட வேண்டும், தொழிலாளர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரசின் நிலைப்பாடு. 

எனவே தமிழக அரசு சாம்சங் தொழிற்சாலை சம்பந்தமாக, தொழிலாளர்கள் போராட்டம் சம்பந்தமாக, தீபாவளி போனஸ் சம்பந்தமாக உடனடியாக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு, சாம்சங் நிறுவனத்தின் சார்பில் ஒரு குழு, தொழிலாளர்கள் சார்பில் ஒரு குழு அமைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.