நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு..! "கொஞ்சமாவது மனிதாபிமானம் வேணும்"
Newstm Tamil December 22, 2024 09:48 AM

கடந்த டிச.,4ம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க சந்தியா தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் சென்ற போது, கூட்டநெரிசல் ஏற்பட்டது. இல், 25 வயதுடைய பெண் உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே விடப்பட்டுள்ளார்.
 

அவரது கைது நடவடிக்கை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
 

இது தொடர்பாக சட்டசபையில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ., அக்பருதீன் ஓவைசி எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்து பேசியதாவது: புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்காக, டிச.,4ம் தேதி டாப் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சில பிரபலங்கள் தியேட்டருக்கு வருவதாகக் கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு டிச.,2ம் தேதி மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, போலீசார் அந்த மனுவை நிராகரித்துள்ளனர்.

அனுமதி மறுத்த பிறகும் நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்துள்ளார். வரும் போது, காரின் சன் ரூப் திறக்கப்பட்டு, அதில் நின்றவாறு ரசிகர்களை பார்த்து கையை அசைத்தபடி வந்துள்ளார்.
 

இதனால், குஷியான ரசிகர்கள், அவரை நோக்கி முண்டியடித்து சென்றுள்ளனர். இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த பிறகும், திரையரங்கை விட்டு வெளியேற நடிகர் அல்லு அர்ஜூன் மறுத்தார். போலீசார் உடனடியாக அவரை வெளியேற்றினர்.
 

கைதாகி வெளியே வந்த பிறகு அல்லு அர்ஜூனை அவரது வீட்டுக்கே சென்று பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி தாயை இழந்த பிறகு, கோமா நிலையை அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க அவர்களுக்கு மனம் வரவில்லை. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
 

மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவர்களை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகளை வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, எனக் கூறினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.