இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா, பெங்களூருவில் இயங்கிவரும் சென்டார்ஸ் லைஃப் ஸ்டைல் பிராண்ட் பி.லிமிட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். அவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்கான தொகையைக் கழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால், அதனை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை.
உத்தப்பாவின் நிறுவனம் ரூ.23,36,602 நிலுவைத் தொகையை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையால் அங்குள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியினை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்நிலுவைத் தொகையினை உத்தப்பாவிடம் இருந்து வசூல் செய்வதற்கு அதிகாரிகள் முயன்றனர்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக ராபின் உத்தப்பாவை கைது செய்யுமாறு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சதக்சரி கோபால் ரெட்டி டிசம்பர் 4-ம் தேதி காவல் துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையினை செலுத்துவதற்கு உத்தப்பாவுக்கு டிச.27-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் செலுத்த தவறும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம்.
ராபின் உத்தப்பா இந்தியாவுக்காக 59 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 7 அரை சதங்களை அடித்துள்ளார். அதேபோல், இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) மிகவும் பிரபலமான வீரராகவும் இருந்துள்ளார்.