மக்களே உஷார்... 90 மருந்துகள் தரமற்றவை.. சளி மருந்துகளை யாரும் சாப்பிடாதீங்க !
Newstm Tamil December 22, 2024 10:48 AM

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அதிர்ச்சி தரும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன.

அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விவரங்களை, அந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மருந்துகளின் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாதமும் மருந்துகளின் தரத்தை சோதனை செய்கிறது. அந்த வகையில் இந்த முறை நடந்த பரிசோதனையிலும் பல மருந்துகள் தோல்வியடைந்துள்ளன. தரமில்லாத மருந்துகளில் சில நிறுவனங்களின் ஆன்டாசிட்கள், பாண்டி, பாராசிட்டமால், க்ளிமிபிரைடு மற்றும் உயர் இரத்த அழுத்த மருந்தான டெல்மிசார்டன் ஆகியவை அடங்கும்.

நாடு முழுவதும் மொத்தம் 34 இடங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில், ஹிமாச்சலில் தயாரிக்கப்பட்ட 14 மருந்துகள் தரத்தை எட்டவில்லை. அவற்றில், டாக்சின் மருந்து செப்கெம், செஃபோப்ராக்ஸ், சிஎம்ஜி பயோடெக் நிறுவனத்தின் பீட்டா ஹிஸ்டைன், எல்விஸ் பார்மாவின் சிறுநீர் தொற்று மருந்து அல்சிப்ரோ ஆகியவையும் தரமானதாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.