அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அதிமுகவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் வரலட்சுமி தொடர்ந்த வழக்கை தாமே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையில், IPC-ல் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக FIR வெளியாகிவிட்டது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவி அளித்த புகாரில், குற்றவாளி ஞானசேகரன் மிரட்டும் போது செல்போனில் சார் என்று அழைத்தது யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அரசியல் காட்சிகள் முதல் பொதுமக்கள் வரை தற்போது எழுப்பும் கேள்வியும் அதுவாகத்தான் இருக்கும் நிலையில், இதற்கு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ஞானசேகரன் செல்போன் பிளைட் மோடில் இருந்து உள்ளது தெரிய வருகிறது, மேலும், மாணவியிடம் தான் தனி ஆள் இல்லை, தனக்கு பின்னால் ஒரு குழு இருப்பது போன்ற ஒரு கட்டமைப்பை ஞானசேகரன் செய்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்கு தொடர்பு இருப்பது இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, சென்னை காவல் ஆணையரும் செய்தியாளர் சந்திப்பில் இதைத்தான் விளக்கம் என்று கொடுத்து இருந்தார்.
ஆனால், மாணவி அளித்த புகாரில், குற்றவாளியின் செல்போனுக்கு அழைப்பு வந்தாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், செல்போன் பிளைட் மோடில் இருந்தால் அழைப்பு வருமா? அப்படியே இருந்தாலும் அந்த நேரத்தில் குற்றவாளி வேறு செல் போன் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளதே! செல்போன் பிளைட் மோடில் இருப்பதை கண்டறிய தொழில்நுட்பம் இருக்கிறதா? ஏதோ சம்பவம் நடந்த அந்த நொடியே குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்தது போல் அல்லவா காவல்துறையில் விளக்கம் இருக்கிறது என்று பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
சம்பவம் நடந்த மறுநாள் இரவு தான் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும், கைது செய்யப்பட்டபின், தப்பி ஓடி கீழே விழுந்து மாவுக்கட்டு போட்ட பிறகு ஒரு சொகுசு காரில் குற்றவாளி அமர்ந்து இருந்த புகைப்படமும் இந்த விவகாரத்தில் கவனிக்க தக்கது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.