திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - டிடிவி தினகரன் கண்டனம்!
Top Tamil News December 29, 2024 12:48 AM

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறைத்தலைவர்கள் மீது கல்லூரி மாணவிகளே புகார் அளித்த பின்பும் குறைந்தபட்ச விசாரணையைக் கூட நடத்த தயங்குவது யாரை பாதுகாப்பதற்காக ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும், பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அக்கல்லூரியைச் சேர்ந்த பொறுப்பு முதல்வர் மீதும், பல்வேறு துறைகளின் தலைவர்களின் மீது மாணவிகளே அளித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, துணைமுதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்திருக்கும் நிலையில், அந்த புகாரின் மீது குறைந்தபட்ச விசாரணையை கூட நடத்த மறுப்பது யாரை பாதுகாப்பதற்காக? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, தற்போது திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் எழுந்திருக்கும் இந்த புகார், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், நற்பண்பையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும், அது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்த பின்னரும் கண்டும் காணாதது போல திமுக அரசு கடந்து செல்வதும் உயர்கல்வி பயிலவே அச்சப்படும் சூழலை உருவாக்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் உட்பட பல்வேறு துறைத்தலைவர்கள் மீது மாணவிகள் அளித்திருக்கும் புகார் மீது தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.