திருச்செந்தூரில் கடந்த சில மாதங்களாக கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் கடல் சீற்றமாக உள்ளது. இதனால், கடற்கரையை சுமார் 50 அடி வரை கடல் அரிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால், கோயிலுக்கு எதிரே உள்ள படிக்கட்டுகள் வழியாக கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பிற்காக, கோயில் நிர்வாகம் தடுப்பு வேலிகள் அமைத்து, கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பல ஆண்டுகள் பழமையான ஒரு சிலை கரை ஒதுங்கியுள்ளது. அதன் உடல் சிங்கத்தின் உடல் போலவும், அதன் முகம் வேறு உருவத்தின் வடிவத்திலும் உள்ளது. இதேபோல், இந்தக் கல்லின் அருகே மற்றொரு கல் சிலை கரை ஒதுங்கியுள்ளது. அது ஒரு சிவலிங்கம் போல் தெரிகிறது. கடற்கரையில் குளித்த பக்தர்கள் அதைப் பார்த்து வியந்துள்ளனர்.
சிங்கத்தின் உடல் போலவும், முகம் வேறு உருவத்தின் வடிவத்திலும் இருக்கும் சிலைகள் மிகவும் பழமையான கோயில்களில் காணப்படுகின்றன. அதில் சிங்கத்தின் உடலும், யாளியின் முகமும் பொறிக்கப்பட்டுள்ளன. யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு புராண உயிரின சிற்பமாகும். இவை பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணப்படுகின்றன. இது சிங்கம் மற்றும் யானையை விட வலிமையானது என்று நம்பப்படுகிறது.
கடந்த காலத்தில், இந்த கல் சிற்பம் சில கோயில்களின் முகப்பில் இருந்தது. திருச்செந்தூர் கோயிலின் புனரமைப்பு பணியின் போது, இந்த கல் அகற்றப்பட்டு கடலோரப் பகுதியில் மூழ்கடிக்கப்பட்டது. கடல் அலைகள் காரணமாக தற்போது ஏற்பட்ட அரிப்பு காரணமாக, கீழே புதைக்கப்பட்ட இந்தக் கல் வெளிப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு காரணமாக, பல கற்சிலைகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. இதைக் கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர். இந்த சூழ்நிலையில், கடற்கரைகளில் கிடக்கும் பழமையான சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
!