ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் பிற கட்சிகள் போட்டியிடாத நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில் விசி சந்திரகுமார் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் 200 சதவீதம் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. பெண்கள் அமோக ஆதரவு கொடுக்கிறார்கள். மறைந்த திருமுகன் ஈவெரா மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார்.
புதிதாக இடைத்தேர்தலுக்கு எந்த வித வாக்குறுதியும் கொடுக்க வேண்டியது இல்லை. நாம் தமிழர் கட்சி என்பது பொய் மற்றும் புரட்டுகளை பேசி அரசியலில் ஒரு வியாதியாக இருக்கிறது. நான் அவர்களுக்கு பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அவர்களோடு போட்டியிடுவது என்பது காலத்தின் கொடுமை. ஈரோட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு இங்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். மேலும் எங்கேயோ எழுதிக் கொண்டு வந்து அதை தற்போது பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று கூறினார்.