Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்? - DK சொல்வதென்ன?
Vikatan January 18, 2025 02:48 AM

பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹைபிரிட் மாடலில் அடுத்த மாதம் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. போட்டி அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களின் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்திய அணி வீரர்களின் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Champions Trophy

காரணம், தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் ஐ.சி.சி தொடர் இது. அதுமட்டுமல்லாமல், கம்பீரின் வருகைக்குப் பின்னர் இந்திய அணி சில மோசமான தோல்விகளை அடைந்ததால், சாம்பியன்ஸ் டிராபிக்கு யாரைத் தேர்வு செய்யபோகிறார்கள், யாரை அணியிலிருந்து நீக்கப்போகிறார்கள் என்பது பெரும் விவாதமாக இருக்கிறது.

மறுபக்கம், சுமார் ஏழு ஆண்டுகளாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் போராடிவரும் கருண் நாயர், நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 8 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 752 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். அதோடு, விதர்பா அணியை முதல்முறையாக விஜய் ஹசாரே டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு கேப்டனாக முன்னின்று கொண்டு சென்றிருக்கிறார்.

கருண் நாயர்

விதர்பா, கர்நாடகா அணிகளுக்கு இடையே நாளை இறுதிப் போட்டி நடைபெறும் அதேவேளையில், சாம்பியன்ஸ் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பும் நாளை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதனால், கருண் நாயருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியெழுந்திருக்கிறது.

இந்த நிலையில், தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், ``நீங்கள் முன்பு பார்த்த அல்ல இப்போது தெரிவது. மயங்க் அகர்வால் (விஜய் ஹசாரே டிராபி தொடரில் கர்நாடக அணி சார்பாக 4 சதங்கள் உட்பட 619 ரன்கள்) கூட நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏறக்குறைய தயாராகிவிட்டது. பெரிதாக மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவதில்லை.

தினேஷ் கார்த்திக்

அதேசமயம், கருண் நாயரை அணிக்குள் எடுக்கும் விஷயமும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால். சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவர் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், அவர் இதே வேகத்தில் சென்றால், ஏன் கூடாது என்ற கேள்வியும் வரும். அவர் சிறப்பான வீரர். அவரை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்." என்று கூறினார்.

Yashasvi Jaiswal | ஜெய்ஸ்வால்

மேலும், சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இடம் பெறுவார் என்று கூறிய தினேஷ் கார்த்திக், ``இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மிக நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதால் அவருக்கு ஓய்வு தேவை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது எளிதானதல்ல. தேர்வுக்குழுவினர் சரியானதைச் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் 100 சதவிகிதம் ஜெய்ஸ்வால் இருப்பார்." என்றார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.