திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழிகள் பலியிட இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பு; பாதுகாப்பு பணியில் போலீசார்..!
Seithipunal Tamil January 19, 2025 06:48 AM

திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட போலீஸார் தடை விதித்துள்ளனர். இவர்கள் மலைமீது செல்லாதவாறு மலையடிவாரத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது  சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவின் சந்தனகூடு வைபவம் ஜனவரி17ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 

குறித்த திருவிழாவை முன்னிட்டு, ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கிராம மக்கள், பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மலை மீதுள்ள பள்ளிவாசலுக்கு கந்தூரி கொடுக்க ஆட்டுடன் ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த காதர் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்பினர் மலை மீது செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதோடு, மலை மேல் உயிர்ப்பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். இதன் பின்னர் அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்பு இஸ்லாமிய்கள கலைந்து சென்றுள்ளனர்.

அத்துடன்,  மலைக்கு மேல் செல்பவர்களை கண்காணிக்க 600-க்கும் மேற்பட்ட போலீஸார் மலைக்கு செல்லும் பாதை, பெரிய ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், தர்கா பள்ளிவாசலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமே சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.