இந்தியா - வங்கதேச எல்லையில் விவசாயிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியா வங்கதேச எல்லையில், மேற்கு வங்க மாநிலத்தின் சுக்தேவ் எல்லை சோதனைச்சாவடி பகுதியில் வேலி அமைக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.
அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என கடந்த 06ஆம் தேதி வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் கூறியதால் பணி நிறுத்தப்பட்டது. பிறகு இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டது. மறுநாள் முதல் வேலி அமைக்கும் பணி நடந்து வருகின்றதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் சர்வதேச எல்லையில், இரு நாட்டு விவசாயிகளும் பணி புரிந்து கொண்டு இருந்தனர். அப்போது வங்கதேச விவசாயிகள் திருட்டில் ஈடுபடுவதாக இந்திய விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதனால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பி.எஸ்.எப்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதைத் தொடர்ந்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு நாட்டு விவசாயிகளும், அவர்களது பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்ற மோதலில் ஈடுபடக்கூடாது என இந்திய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
எந்த பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் கூற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.