முறையாக பராமரிக்கப்படாத நெல்லை மாநகராட்சி வ.உ சி மைதான விளையாட்டு உபகரணங்களால் சிறுமியின் சுண்டுவிரல் துண்டான கொடூரம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு குழந்தைகளும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளையும் ஆண்டியப்பன் தினம்தோறும் பள்ளிக்கு வந்து அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலையில் இளைய மகள் பள்ளியிலிருந்து அழைத்து சென்று பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் விளையாட அழைத்து சென்றுள்ளார்.
7 வயது சிறுமி அனுஸ்ரீ அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் ஒவ்வொன்றாக ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குழந்தைகள் ஏறி சறுக்கி விளையாடும் பிளாஸ்டிக் பலகை சிறிய அளவில் உடைந்து சேதம் ஆகி இருந்துள்ளது. சறுக்கு விளையாட்டில் மேலிருந்து கீழே நோக்கி சறுக்கும் போது கால் சுண்டு விரல் உடைந்த பிளாஸ்டிக் பலகை துளையில் சிக்கி விரல் துண்டானது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ஆண்டியப்பன், உடனடியாக தனது மகளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் துண்டான கால் விரலை மீண்டும் சேர்க்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர்.
இந்நிலையில் தந்தை ஆண்டியப்பன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். நேற்று மாலையில் வ.உ சி மைதானத்தில் விளையாடிய போது இடது காலில் உள்ள சுண்டு விரல் துண்டானது, இதற்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமி அங்குள்ள சறுக்கில் விளையாடிய போது விபரீதம் ஏற்பட்டுள்ளது. 7 வயது சிறுமி துடித்துக் கொண்டு இருக்கிறார். தரமற்ற விளையாட்டு உபகரணங்களை திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் வ உ சி மைதானத்தில் உள்ளதால் இது போன்ற விளையாடும் சிறுவர், சிறுமிகளுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப வேண்டும்.
ஏற்கனவே வஉசி மைதானத்தில் உள்ள அரங்கின் மேற்கூரை பொருத்திய சில மாதங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தரமற்ற விளையாட்டு உபகரணங்கள் தரமற்ற மேல்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளதால் விளையாட வரும் சிறு குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது போன்ற தரமற்ற பொருட்களால் உருவான உபகரங்களாலும், போதிய பராமரிப்பு இன்மையாலும் சிறுவர் சிறுமிகள் விளையாடும் போது உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் அமைந்துள்ளதை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.