2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். வருமானவரி விலக்கு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இன்று ராணிப்பேட்டையில் 5 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 23 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஈரோடு கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பொது மக்களுக்கு கட்டாய புற்றுநோய் பரிசோதனையில் 140 பேரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மருந்தகங்கள் விரைவில் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே இது போன்ற காரியங்களை செய்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டின் 36 வகை மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.