மதுபோதை ஒழிப்பு பேரணிக்குள் நுழைந்த கார்; போதையில் கார் ஓட்டிய தவெக முன்னாள் நிர்வாகி மீது வழக்கு
Vikatan February 02, 2025 11:48 PM

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர். அப்போது, அந்த வழியாகத் தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் கொடிகட்டி வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தண்ணீர் லாரி மீது மோதி நின்றது. இதனைப் பார்த்த பொதுமக்கள், மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற இளைஞர்கள் என அனைவரும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

விபத்து

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அந்த காரில் இருந்தவர்களை வெளியே இறங்கச் சொல்லிக் கூச்சலிட்டனர். அப்போது, காரில் இருந்த மூன்று இளைஞர்கள் மது போதையிலிருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த மூன்று பேரையும் காரில் இருந்து வெளியே தள்ளி சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த திருமயம் காவல் நிலைய போலீஸார், மது போதையிலிருந்த மூன்று பேரையும் பொதுமக்களிடமிருந்து மீட்டு, திருமயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டி வந்தது சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி மணி எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேர் மீதும் திருமயம் போலீஸார் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து ரூ.10,000 அபராதம் விதித்தனர்.

விபத்து

போதை ஒழிப்பு மாரத்தான் போட்டிக்குள் மது போதையில் கார் ஓட்டி வந்தவர்கள் விபத்தை ஏற்படுத்தியது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.