``மகளிர் ஆணையப் பதவிகளிலும் கொல்லைப்புற நியமனமா?'' – புதுச்சேரி அரசை சாடும் திமுக மகளிரணி
Vikatan February 02, 2025 08:48 PM

மகளிர் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் பதவிகளை நிரப்ப புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஜமுனா என்ற பெண் சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் கே.ஆர்.ஸ்ரீராம் அடங்கிய அமர்வில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ``புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு துவக்கப்பட்ட மகளிர் ஆணையத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இதன்மூலம் புதுச்சேரி பெண்களின் உரிமைகள் கேள்விக்குறியாகியிருக்கிறது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

புதுச்சேரி அரசு

அதையடுத்து பேசிய நீதிபதிகள், ``இந்த வழக்கில் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை பார்த்தோம். அந்த மனு, காலியாக இருக்கும் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறையை இழுத்தடிப்பதற்கான முயற்சியாக மட்டுமே தெரிகிறது. கடந்த 2022 பிப்ரவரி 6-ம் தேதி ஆணையத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால் ஜூன் மாதம்தான் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுவும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான். தேர்வுக்குழு திருத்த வரைவு எப்போது சட்டத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது ? அதன் நிலை என்ன ? என்பது குறித்த விபரங்கள் பதில் மனுவில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே தேர்வுக் குழுவை அமைக்காதது ஏன்? இது புதுச்சேரி அரசு மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திறமையின்மையையே காட்டுகிறது.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான், சம்மந்தப்பட்ட துறை விழித்துக் கொண்டிருக்கிறது. விண்ணப்பங்கள் வந்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வுக் குழு அமைக்கப்படவில்லை. இது பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மாநில அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வுக்குழுவை ஏன் அமைக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அது தொடர்பான விபரங்களுடன் விரிவான பதில் மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.  மேலும் புதுச்சேரி அரசுக்கு ரூ.25,000/- அபராதம் விதிக்கப்படுகிறது” என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி அந்த அபராதத்தை செலுத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, மகளிர் ஆணையத் தலைவியாக பாகூரைச் சேர்ந்த நாகஜோதி, உறுப்பினர்களாக குருமாம்பேட்டைச் சேர்ந்த சுஜாதா, பாகூரைச் சேர்ந்த அன்பரசி (எஸ்.சி), சந்திரா (எஸ்.டி) போன்றவர்களை நியமித்திருப்பதாக அறிவித்தது. பொதுவாக மகளிர் ஆணைய நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடத்தி, அதில் தகுதியானவர்களை நியமிப்பது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் அப்படி எந்த நேர்காணலையும் நடத்தாமல், ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நிர்வாகிகளாக நியமித்து அரசாணை வெளியிட்டிருப்பது சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது.

இதுகுறித்து புதுச்சேரி தி.மு.க மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``புதுச்சேரி அரசு மகளிர் ஆணைய நிர்வாகிகள் பதவிக்கு பெயரளவில் விண்ணப்பங்களை பெற்றுவிட்டு, தனக்கு ஆதரவானவர்களை நிர்வாகிகளாக நியமித்திருப்பது ஏற்புடையதல்ல. எத்தனை காலம்தான் பெண்களை ஏவலுக்கான கைப்பாவைகளாக வைத்திருப்பீர்கள் ? நேர்மையான திறமையான படித்த பெண்களை நியமித்தால் நேர்மை, நியாயம், நீதி என்று பேசி ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் எனக் கருதி, தங்கள் ஆதரவாளர்களை கைப்பாவைகளாக நியமிக்க நடந்த முயற்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயரதிகாரிகள் அதற்கு சம்மதிக்காததால்தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம்

பெயரளவுக்குக் கூட நேர்முகத் தேர்வு நடத்தாமல் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தவறுகளுக்கும், முறைகேடுகளுக்கும் வழி வகை செய்யும் வகையில் ஆட்சியாளர்கள் செயல்படுவது வேதனை அளிக்கிறது. அதேபோல ஜனவரி 22-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை, ஜனவரி 27-ம் தேதிக்கு பிறகு வெளியே தெரியும் வகையில் அரசிதழின் இணையதளத்தை ஒரு வாரத்திற்கு முடக்கி வைத்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தப் பணிக்கு ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் நியமிக்கப்பட்டது ஏன் ? அதேபோல ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக விண்ணப்பங்களைப் பெற்றுவிட்டு, நான்கு பேரை மட்டுமே நியமித்தது ஏன்?

தேர்வுக்குழுவின் வெளிப்படைத்தன்மை என இந்த மகளிர் ஆணைய தேர்வில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 10-க்கும் குறைவான பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியாக பிரச்னை ஏற்பட்டால், அதுகுறித்து புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க புதுச்சேரி மாவட்ட அளவிலான புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆட்சியாளர்களின் செல்வாக்கும், ஆதரவும் உள்ளவர்களையும், சர்ச்சையில் சிக்கிய நபர்களையும் நிர்வாகிகளாக நியமித்துள்ளது வேதனைக்குரியது” என்று தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி அரசு

இதுகுறித்து நம்மிடம் பேசிய காயத்ரி ஸ்ரீகாந்த், ``பெண்களின் உரிமைக்காக செயல்பட வேண்டிய மகளிர் ஆணையத்தில் ஆட்சியாளர்கள் தங்களது ஆதரவாளர்களை நியமித்தால், அந்த அமைப்பு எப்படி நேர்மையாக செயல்படும் ? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் ? மகளிர் ஆணையப் பதவிகளிலும் கொல்லைப்புற நியமனமா ? திறமையான பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளில் அதிகாரம் அளிக்க மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு தி.மு.க மகளிரணி சார்பில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம். சர்ச்சைக்குரிய இந்தக் குழுவை கலைத்துவிட்டு, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் பெண்கள், குழந்தைகள் நலன் சார்ந்து உழைக்கும்  அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.