இன்று அண்ணா நினைவு நாள் பேரணி... சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
Dinamaalai February 05, 2025 12:48 AM

இன்று பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னையில் இன்று காலை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று பிப்ரவரி 3ம் தேதி காலை அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடம் வரை மௌன ஊர்வலம் செல்ல உள்ளார்கள். இதற்காக  விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.


1. போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும். 

2. கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு இராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும். 

3. பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை x திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாக செல்லலாம். 


4. மௌன ஊர்வலம் வாலாஜாயில் வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையின் இந்த ஏற்பாடுக்கு வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்கும்படி  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.