திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்கள் எவ்வித இடர்பாடுமின்றி வழக்கம்போல் தரிசனம் செய்கின்றனர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரையில் 144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இன்று 04.02.2025 வழக்கம்போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் முறையாக நடைபெற்று வருகின்றது. மேலும், திருக்கோயிலில் தைத்தெப்பதிருவிழா சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. பக்தர்கள் வழக்கம்போல் எவ்வித இடர்பாடுமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்றும் கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் மாட்டு கறி சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் நேற்றும், இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.