சொத்துக்கு அடிபோட்ட மனைவி- கணவர் இறந்துவிட்டதாக நாடகம்! திடீரென உயிருடன் வந்ததால் பரபரப்பு
Top Tamil News February 05, 2025 03:48 AM

எடப்பாடி அருகே கணவன் உயிரோடு இருக்கும் போதே சொத்திற்காக ஆசைப்பட்ட மனைவி, கணவர் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் போலியாக பெற்று வாரிசு சான்றிதழ் வாங்க எடப்பாடி வருவாய்த்துறையிடம் மனு அளித்த போது வருவாய்த்துறை விசாரணையில் கணவர் விஜயகுமார் உயிரோடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் வசித்து வந்த விஜயகுமார் கடந்த 2006-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக மலேசியாவில் பணிபுரிந்து வந்த விஜயகுமார் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை மனைவி ரேவதிக்கு வீட்டு செலவிற்காக அனுப்பிய பணத்தை சுருட்டிக் கொண்டதோடு, இது சம்பந்தமாக கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சிறிது நாட்களுக்கு பிறகு எடப்பாடி காவல் நிலையத்தில் தனது கணவர் காணவில்லை என்றும் மனைவி ரேவதி புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பவானியில் ரேவதியின் கணவர் விஜயகுமார் இறந்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்து முதல் தகவலறிக்கை பதிவு செய்து அதனை வைத்து போலியான இறப்புச் சான்றிதழும் பெற்றுக் கொண்டு விஜயகுமாரின் பெயரில் உள்ள சொத்துகளை அபகரிக்க எடப்பாடி வட்டாட்சியர் வருவாய் துறையினரிடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் உயிரிழந்து விட்டாரா? என்று விசாரணை மேற்கொண்ட போது அவர் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் மனுதாரர் ரேவதியையும் இறந்து விட்டதாக கூறப்பட்ட அவரது கணவர் விஜயகுமாரையும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்த வட்டாட்சியர் வைத்தியலிங்கம் விசாரணை மேற்கொண்டு போலியான இறப்புச் சான்றிதழ் வழங்கியதை கண்டறிந்து ரேவதியை எடப்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இறந்து விட்டதாக கூறப்பட்ட கணவர் விஜயகுமார் அவரது மனைவி ரேவதி மீது எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.