ராமநாதபுரம் மாவட்டம் மேலப்பெருங்கரையில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை எஸ்கேப் ஆனதால் பெண் வீட்டார் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அலங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா - ஆனந்தவள்ளி தம்பதியின் மகன் பாண்டி, சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த மதுரைமன்னன் - ராஜலட்சுமியின் மகள் குஷியாகாந்தி. இவர்கள் இருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று காலை 9:30 மணி அளவில் மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் அங்கயர்கன்னி ஆலயத்தில் திருமணம் நடைபெற இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு இந்த திருமணம் நிச்சயம் செய்தபடி நடைபெறாது என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் ஜனவரி 31 ஆம் தேதி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்திற்கு மணமகன் பாண்டி சம்மதித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு முதல் திருமண வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை திருமணத்திற்கு பெண் மற்றும் பெண்ணின் உறவினர்கள் தயாராக இருந்த நிலையில் திருமணம் நடைபெற இருந்த ஆலயத்திற்கு மாப்பிள்ளை மற்றும் மணமகன் வீட்டார் யாரும் வரவில்லை, மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொண்ட போது அனைவரின் மொபைல்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மணவறையில் இருக்க வேண்டிய மணமகள் மாப்பிள்ளை எஸ்கேப் ஆனதால் காவல் நிலையத்தில் நின்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. திருமணம் நின்ற அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்ணின் தந்தை மாயமாகிவிட்டார், அவரை ஒருபுறம் உறவினர்கள் தேடி வருகின்றனர். திருமணத்திற்கு தயார் செய்யப்பட்ட உணவுகள் வீணாகியது, இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை எஸ்கேப் ஆனது பெண் வீட்டாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.