மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனையில் இந்து அமைப்பினர் போராட்டம் அறிவித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி இன்று இந்து அமைப்பினார் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற போது அவரை காவல்துறையினர் கைது செய்து வீட்டு சிறையில் வைத்தனர். அவர் நீதிமன்ற அனுமதிக்குப்பின் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அங்கு பேசியதாவது, என்னை வீட்டுக்காவலில் சிறை வைத்திருந்த நிலையில் இங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் 40 நிமிடங்கள் கழித்து தான் விடுவித்தார்கள். இந்த தமிழகத்தில் இருக்கிற தலிபான அரசாங்கம் ஸ்டாலினின் இந்து விரோத தீய அரசுக்கு நான் சொல்கிறேன். உத்திரபிரதேச மாநிலத்தில் இப்படித்தான் செய்தார்கள். அங்கு இனி எதிரணி ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்றுதான் தமிழ்நாட்டிலும் இவர்களுக்கு ஏற்படப்போகிறது. திருப்பரங்குன்றம் அறுபடை முருகன் வீடுகளில் ஒன்றை பங்கு போட நினைக்கிறார்கள்.
இங்கு ஆட்சியில் இருப்பவர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவரும் பேசுவது ரெக்கார்டு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை ஆட்சிக்கு வரும்போது அவர்கள் மீது ஊழல் வழக்கு போட ஏதுவாக இருக்கும். இந்த இந்து விரோத தீய அரசுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். முதலில் வந்தது முருகன் கோவிலா இல்லையெனில் இந்த தர்காவா.? மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு மதுரை மாவட்டத்திற்கு மட்டும் தானே பொருந்தும்.
அப்படி இருக்கும்போது அங்கு இருக்கிற என்னை கைது செய்து வீட்டு சிறையில் வைத்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவு அங்கு வரை அப்போது செல்லுபடி ஆகுமா.? இங்கு இன்றைக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான இந்து அமைப்பினர் மற்றும் மக்கள் கூடியிருப்பார்கள். ஆனால் அதனை தடுக்கிறார்கள் என்றார். மேலும் தமிழகத்தில் திமுக அரசை தலிபான் அரசாங்கம் என்று எச். ராஜா விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.