ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் முதல்முறையாக இந்திய பெரும் பணக்காரரான அதானியை குறிவைத்தது ஏன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில், சில மீடியாக்கள் எழுப்பும் "Red Flags" அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். குறிப்பிட்ட தொழிலதிபர் பற்றி ஊடகங்களில் மோசமான குறியீடுகள் எழுகையில் நிறுவனம் அவர்களைக் குறிவைத்துள்ளது. மீடியாக்கள் வழங்கும் விவரங்களை உற்றுநோக்கி தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து சட்டமீறல்களை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
அதானி மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், நாதன் ஆண்டர்சன் இன்றும் அவரது நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றே கூறுகிறார்.
அதானி - adani என்ன நடந்தது?கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் ஹிண்டென்பெர்க் நிறுவனம் அதானி குழுமம், வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி, அதிக வருவாய் வருவதாக காட்டிக்கொண்டு, ஸ்டாக் விலையை உயரச் செய்து அதிக கடன்களைப் பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது.
Hindenburg அறிக்கையால் அதானி குழுமம் பங்குச்சந்தையில் உடனடி வீழ்ச்சியை சந்தித்தது. அதன் சந்தை மதிப்பிலிருந்து 150 பில்லியன் டாலர்களை இழந்தது. எனினும் அதானி நிறுவனம் அதன் வீழ்ச்சியிலிருந்து எழுந்து வந்துள்ளது. பெரும்பாலும் இழந்தவற்றை மீட்டுக்கொண்டனர்.
அதானி நிறுவனத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, வலதுசாரிகள் பலரும் இது இந்திய பொருளாதாரத்துக்கு எதிரான வெளிநாட்டு சதி என்றனர். இதனை மறுத்துள்ளார் நாதன் ஆண்டெர்சன்.
"நாங்கள் எப்போதும் இந்தியாவின் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். சந்தையில் இருக்கும் வெளிப்படைத்தன்மையும், வலிமையான கார்பரேட் நிர்வாகமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய எரிபொருளாக இருக்கும்" என்றார் நாதன்.
நாதன் ஆண்டர்சன்அதானி நிறுவனம் அதன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஹிண்டன்பெர்க் அறிக்கை நிறுவனத்தின் நன் மதிப்பை கலங்கப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தது.
ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் விசாரணையைத் தவிர வேறெந்த விசாரணையும் தேவையில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஹிண்டன்பர்க் கலைக்கப்பட்ட ஹிண்டன்பர்க்ஜனவரி 2025-ம் ஆண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் கலைக்கப்பட்டது. எந்தவிதமான அச்சுறுத்தலினாலும், உடல்நலக் குறைவினாலும், தனிப்பட்ட பிரச்னைகளினாலும் தான் நிறுவனத்தைக் கலைக்கவில்லை என நாதன் ஆண்டர்சன் விளக்கமளித்தார்.
ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு மற்றொருவரை நிறுவனத்தை நடத்த விட்டிருக்கலாமே எனக் கேட்கப்பட்டபோது, "அந்த பிராண்ட் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஒரு சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகவோ, சாஃப்ட்வேர் நிறுவனமாகவோ இருந்தால் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் இது என்னால் செய்யப்படும் ஆய்வுகளைப் பற்றியது" என பதிலளித்தார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டாலும் அதன் முந்தைய குழுவினர் வேறும் பெயரில் தொடர்ந்து செயல்பட்டால் அவர்களுக்குத்தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார் நாதன் ஆண்டெர்சன்.