Varun Chakaravarthy : 'இந்திய ஓடிஐ அணியில் வருண் சக்கரவர்த்தி!' - வெளியான அறிவிப்பு!
Vikatan February 05, 2025 02:48 AM
இந்திய டி20 அணியில் ஆடி சிறப்பான செயல்பாட்டை கொடுத்து வந்த வருண் சக்கரவர்த்தி, இப்போது முதல் முறையாக இந்தியாவின் ஓடிஐ அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
Varun Chakaravarthy

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ ஆட திட்டமிட்டிருந்தது. டி20 தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 4-1 என தொடரை ஆதிக்கமாக வென்றிருக்கிறது.

டி20 தொடரை இந்தியா வென்றதற்கு வருண் சக்கரவர்த்தி மிக முக்கிய காரணமாக இருந்திருந்தார். 5 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். கம்பேக்குக்கு பிறகு ஆடிய அத்தனை டி20 தொடர்களிலும் சிறப்பாக ஆடியிருந்தார். உள்ளூர் அளவில் விஜய் ஹசாரே ஓடிஐ தொடரிலும் சிறப்பாக ஆடியிருந்தார். இதனால் இந்திய அணிக்கான ஓடிஐ தொடரிலும் வருண் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருணின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பிசிசிஐ விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

இந்நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடிந்திருக்கும் சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் வருணின் பெயரையும் பிசிசிஐ சேர்த்துள்ளது. முதல் ஓடிஐ போட்டி நாக்பூரில் நடக்கவிருக்கிறது.

Varun Chakaravarthy

இப்போது வருண் சக்கரவர்த்தி நாக்பூரில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருண் சக்கரவர்த்தியின் பெயர் சேர்க்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.