ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களுடன் 46 பேர் போட்டியிட்டனர். 53 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 வாக்குச்சாவடிகளில் காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். இறுதியில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிவாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பு அடுக்கி வைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள், கட்சியினர் என அனைவரும் சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் நுழைவு வாயில் அருகே நின்று தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறுமா? அல்லது நாதக வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.