இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழி பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னை தமிழை காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டமாகும். அன்னை தமிழை ஆதிக்க மொழியிடமிருந்து பாதுகாப்பதற்கான போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டமாகும். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம்.
அவர்களும் இந்தியை திணித்துக் கொண்டே இருக்கிறார்கள் நாமும் தொடர்ந்து எதிர்த்து கொண்டே இருக்கிறோம். முற்றுப்புள்ளி வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். வடக்கின் ஆதிக்கத்தில் வால் பிடிக்கும் அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி கேட்கின்ற முதல் கேள்வி, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்திய ஏற்றுக் கொண்ட போது தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது என்பதுதான். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே தனக்கான மொழிக் கொள்கையையும் தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருந்தது இன்றைய தமிழ் நாடான அன்றைய சென்னை மாகாணம்.
அதற்கு அடிப்படை காரணம் திராவிட இயக்கத்தின் மொழி உணர்வும் இனப்பற்றும் தான். அதுதான் தமிழ்நாடு இன்றளவும் தனித்துவமான மாநிலமாகவும் கல்வியில் திறன் மேம்பாட்டில் உலகளாவிய உயர்ந்த வேலை வாய்ப்புகளில் முன்னணியில் நிற்கும் மாநிலமாகவும் தமிழகத்தை உயர்த்தியுள்ளது. தாய் மொழியை அடிப்படையாகவும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாகவும் கொண்டு அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு கடைபிடித்து வருவதால் தான் இந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தமிழ் மொழி பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னை தமிழை காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.