நாளை வரை நீட் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு!
Dinamaalai March 10, 2025 04:48 PM

இந்தியா  முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி  மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.


அதே சமயத்தில் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.  நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை என்டிஏ ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 4ம் தேதி நாடு முழுவதும் தோ்வு நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு  பிப்ரவரி 7ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்து இருப்பதாக  கூறப்படுகிறது.


இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ வாய்ப்பு வழங்கியது. அதன்படி மாணவா்கள் இணையதளம் மூலம் மார்ச் 11ம் தேதி  செவ்வாய்க்கிழமை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களை  இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.