பழனிசாமியை தவிர்த்து, சபாநாயகரை சந்தித்த செங்கோட்டையன்; காரணம் என்ன?
Seithipunal Tamil March 16, 2025 08:48 AM

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.  குறித்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான செங்கோட்டையன் புறக்கணித்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அத்துடன், அவர் சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும் தவிர்த்தார்.

இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 02-வது நாளான இன்று நடந்தது. அதிலும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்தார். அத்துடன், அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட  சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில், சபாநாயகரை சந்தித்தது ஏன்? என்பது குறித்து செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் விளக்கமளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், கோபி தொகுதியில் உள்ள கொடிவேரி அணையில் நாள் ஒன்றுக்கு 03 லட்சம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுக்கும் ஒரு தொழிற்சாலை அமைய இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தன்னிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காகவே சபாநாயகரை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் இருந்ததாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

இதையடுத்து 'எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தனக்கும், அவரும் எந்த முரண்பாடும் கிடையாது என்றும், தன்னுடைய கொள்கை உயர்வானது, பாதை தெளிவானது என்றும் திட்டவட்டமாக செங்கோட்டையன் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.