மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படைப்பான கைதி படத்தில், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை சினிமாட்டிக் விருந்தாக வைத்து சினிமா ரசிகர்களை தன்மீது கவனம் செலுத்த வைத்தார். அதைத்தொடர்ந்து, விஜய், கமல் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் இப்போது ரஜினியை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவ்வாறு குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்துவிட்ட லோகேஷுக்கு, அவரின் 39-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில், லோகேஷின் கைதி பட ஹீரோ கார்த்தி, அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கையோடு, பிறந்தநாள் பரிசாக அவரின் கையில் காப்பு ஒன்று போட்டிருக்கிறார்.
இந்தச் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை கார்த்தி, ‘DILLI RETURNS’ என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். விரைவில் ‘கைதி 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.