அதிரடி காட்டிய டிரம்ப் மற்றும் மஸ்க்…! மார்ச் 20-ல் மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil March 16, 2025 11:48 AM

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து மேற்கொண்ட பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் ஏவுதல் நேற்று அதிகாலை வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. இந்த ராக்கெட் புறப்பட்ட 9 நிமிடங்களுக்குப் பிறகு, அதிலிருந்த டிராகன் காப்ஸ்யூல் வெற்றிகரமாக பிரிந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பாய்ந்தது. இந்த ஆய்வு பயணத்தின் முக்கியமான இலக்கு, கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டு பூமிக்குத் திரும்பச்செய்வதே ஆகும்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், கடந்த ஜூன் 2023-இல் ISS-க்கு சென்றனர். 8 நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களின் பயணக் காப்ஸ்யூலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவர்கள் 9 மாதங்களாக அங்கேயே அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, அவரின் ஆலோசகரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவருமான எலான் மஸ்க்கும் கவனத்தில் கொண்டு, மீட்பு பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டனர்.

புதிய விண்வெளி வீரர்கள் ISS-க்கு புறப்பட்டனர்

இந்த பால்கன் 9 ராக்கெட் மூலம் நாசா விண்வெளி வீரர்கள் ஆன் மெக்லைன் மற்றும் நிக்கோல் அயர்ஸ், ஜப்பான் ஜாக்சா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் டகுயா ஒனிஷி, மற்றும் ரஷ்ய ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தின் கிரில் பெஸ்கோவ் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குக் கொண்டு செல்லும் க்ரூ-10 குழு பயணமாகியுள்ளது. அவர்கள் ISS-க்கு சென்றவுடன், தற்போதைய குழு உறுப்பினர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

மார்ச் 20க்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்

வெற்றிகரமான இந்த புதிய ஏவுதல் மூலம், மார்ச் 20-க்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு புறப்படுவார் என்று நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதியாக அனுப்பப்பட்ட க்ரூ-10 குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்குப் பிறகு, சுனிதா மற்றும் அவரது குழுவினர் பத்திரமாக பூமிக்குத் திரும்பும் திட்டம் தயார் நிலையில் உள்ளது. பல மாதங்கள் விண்வெளியில் இருந்து, மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு, இந்த வெற்றிகரமான பால்கன் 9 ராக்கெட் ஏவுதல் மிக முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.